சென்னையிலும் காற்றுமாசு? எச்சரிக்கை - Tech Isolate

Technical creator

Recent

Recent News

Saturday 9 November 2019

சென்னையிலும் காற்றுமாசு? எச்சரிக்கை

 சென்னையிலும் காற்றுமாசு? எச்சரிக்கை
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது  காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு எண் இயல்பாக 50 இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் டெல்லியில் 600ஐ கடந்துள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க டெல்லி மாநில அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தாலும் பெரியளவில் பலனளிக்காதது ஏமாற்றத்தையே தந்துள்ளது.
டெல்லி மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள பல்வேறு பெரு நகரங்களுக்கும் இந்த நிலை விரைவில் வரும் என்று ஆய்வுகள் கூறிக்கொண்டிருந்தபோதே சென்னையை புகை மண்டலம் சூழத் தொடங்கியது. 

சென்னையின் பல இடங்களிலும் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டம் போல காட்சியளிக்கிறது. பனிமூட்டம்தான் என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை காலத்தில் பனி சூழ்ந்துள்ளது என மக்கள் சாதாரணமாக கடந்துபோய்கொண்டிருக்க பனி அல்ல, அது மாசு கலந்த காற்று என அறிவிப்புகள் வந்தன.
மேற்சொன்னபடி மனிதர்கள் இயல்பாக சுவாசிக்ககூடிய அளவு 50 ஆக இருக்கும் போது சென்னை மணலியில் காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு எண் 358 ஆக உள்ளது. வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் முறையே 289, 237 என தரக் குறியீட்டு எண் உள்ளது.
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் மிகவும் தெளிவானவை. சென்னையின் புறநகர் பகுதிகளில் குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில்  தீ விபத்து ஏற்பட்டதும்தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.
இவைதவிர, சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை, சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதி ஆகியவையும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும் என்று தெரிய வருகின்றது

😣
சென்னை காற்று மாசுபாடு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறியதாவது: வழக்கமாக சென்னையில் தரை பகுதியின் வெப்பநிலையும் வானில் 500 மீட்டருக்கு மேலான வெப்பநிலையும் ஒரே அளவில் இருக்கும். அப்போது தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் காற்று மாசு ஆகியன மேலே இழுத்து செல்லப்படும் பின் காற்றின் வீச்சில் கடல் பகுதிக்குள் சென்று விடும்.
ஆனால் சென்னையில் மூன்று நாட்களாக காற்றின் வீச்சு குறைந்து 'இன்வேர்ஷன்' எனப்படும் தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தரைப்பகுதி வெப்பநிலை குறைவாகவும் 500 மீட்டருக்கு மேல் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது. அதனால் காற்றில் கலந்த மாசு நகர முடியாமல் வளி மண்டலத்தில் மிதக்கிறது. கடல் காற்றின் வேகம் அதிகரித்தால் இந்த நிலை மாறி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக இதில் இருந்து தெரிவது என்னவென்றால் இந்த காற்று மாசு இவ்வளவு நாளாக காற்றின் வேகத்தால் கடலுக்குள் தள்ளி செல்லப்பட்டு வெளியே தெரியாமல் இருந்துள்ளது. வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது
எனவே இப்போதில் இருந்தே காற்று மாசுவினை  அபாயமாக கருதி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.

No comments:

Post a Comment

Facebook